குன்னூரில் வனப்பகுதியில் யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைப்பு-மரங்கள் வெட்டப்பட்டதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
குன்னூரில் விதிகளை மீறி வனப்பகுதியில் யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனப்பகுதியில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி
குன்னூரில் விதிகளை மீறி வனப்பகுதியில் யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனப்பகுதியில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விதிகளை மீறி சாலை அமைப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை குரும்பாடி வனப்பகுதியை ஒட்டி தனியார் பட்டா இடம் உள்ளது. இந்த இடத்தில் காபி தோட்டம் அமைக்க நிலத்தை சமன்படுத்த பொக்லைன் எந்திரம் பயன்படுத்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி வாங்கப்பட்டு உள்ளது.
ஆனால் இங்குள்ள தனியார் இடத்திற்கு செல்ல பல கிலோமீட்டர் தூரத்துக்கு விதிகளை மீறி பொக்லைன் பயன்படுத்தி, வனப்பகுதியில் மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு என்ற பெயரில் பொக்லைனுக்கு அனுமதி வாங்கி வீட்டுமனைகள் உருவாக்கும் பணிகள் அவ்வப்போது நடக்கிறது தோட்டங்களில் அனுமதி இன்றி சாலை அமைக்கப்படுகிறது இதனால் இயற்கை சூழ்நிலை முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று குற்றம் சாட்டினர்.
மரங்கள் வெட்டி கடத்தல்
இதுகுறித்த வனத்துறையினர் கூறுகையில், குறும்பாடி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது தெரியவந்தது. காட்டு வகை மரங்களான வாகை, செந்தூரம், கோலி உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண்ணைத் தோண்டி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பகுதியில் பட்டியலின மரங்களான ஈட்டி வகை மரங்களும் உள்ளன. எனவே தொடர்ந்து பாதையை விரிவுபடுத்தினால் பட்டியலின மரங்களும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இதற்கு இடையே இது யானை வலசை பாதை என்பது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாங்கள் நடத்திய விசாரணையில் விவசாய பணிகள் அங்கு நடைபெறவில்லை. தனியார் சார்பில் காட்டேஜ் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு யானை - மனித மோதல் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, வருவாய்த்துறை அளித்த அனுமதியை ரத்து செய்யவும் வருங்காலங்களில் இது போன்ற அனுமதியை வழங்க வேண்டாம் என்றும் குன்னூர் தாசில்தார் சிவகுமாருக்கு கடந்த 10 - ந் தேதியே கடிதம் அனுப்பி உள்ளோம். மேலும் அனுமதி இன்றி மரங்கள் வெட்டிய விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
பொக்லைன் எந்திரம் பறிமுதல்
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், பட்டா நிலம் என்பதால் காபி மற்றும் மிளகு பயிரிட அனுமதி வாங்கி உள்ளனர். ஆனால் விதிகளை மீறி பொக்லைன் எந்திரம் பயன்படுத்தி உள்ளனர். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி கடந்த 20-ந் தேதியே 1 பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்றனர்.