சுற்றுச்சூழல் பாதுகாப்பு- எரிபொருள் சேமிப்புக்காக சென்னிமலை என்ஜினீயர் கண்டுபிடித்த எந்திரத்துக்கு காப்புரிமை; 7 ஆண்டுக்கு பின் மத்திய அரசு வழங்கியது


சுற்றுச்சூழல் பாதுகாப்பு- எரிபொருள் சேமிப்புக்காக   சென்னிமலை என்ஜினீயர் கண்டுபிடித்த எந்திரத்துக்கு காப்புரிமை;  7 ஆண்டுக்கு பின்  மத்திய அரசு வழங்கியது
x
தினத்தந்தி 6 Oct 2022 2:25 AM IST (Updated: 6 Oct 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்புக்காக சென்னிமலையை சேர்ந்த என்ஜினீயர் கண்டுபிடித்த எந்திரத்துக்கான மத்திய அரசின் காப்புரிமை 7 ஆண்டுக்கு பிறகு கிடைத்து உள்ளது.

ஈரோடு

சென்னிமலை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்புக்காக சென்னிமலையை சேர்ந்த என்ஜினீயர் கண்டுபிடித்த எந்திரத்துக்கான மத்திய அரசின் காப்புரிமை 7 ஆண்டுக்கு பிறகு கிடைத்து உள்ளது.

என்ஜினீயர்

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் வசிக்கும் நேரு (வயது 59) என்பவர் எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய எந்திரம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளார். மேலும் அவர் இந்த எந்திரத்துக்கு மத்திய அரசின் காப்புரிமையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து 'தினத்திந்தி'க்கு என்ஜினீயர் நேரு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் 1983-ம் ஆண்டில் கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் முடித்தேன். பின்னர் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 17 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினேன்.

புதிய எந்திரம்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டருடன் இணைந்து பெட்ரோல் கார்களுக்கான எரிபொருள் சேமிப்பு கருவியை வடிவமைத்தேன். என்ஜினுக்குள் செல்லும் எரிபொருள் முழுமையாக எரிக்கப்படாமல் கரித்துகள்களாக வெளியேறுவதால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் எரிபொருளும் வீணாகிறது.

இதனால் நான் உருவாக்கிய எந்திரம் மூலம் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை காற்றுடன் சேர்த்து என்ஜினுக்குள் செலுத்தப்படுவதால் கரித்துகள்கள் (கார்பன்) முழுமையாக எரிக்கப்படுகிறது. இதனால் புகை மாசு முற்றிலும் குறைவதுடன், எரிபொருள் வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும் பராமரிப்பு செலவு குறைந்து என்ஜினின் செயல் திறனும் அதிகரிக்கும்.

காப்புரிமை

இந்த கண்டுபிடிப்பு எந்திரத்திற்காக மத்திய அரசிடம் காப்புரிமை கேட்டு 7 வருடங்களுக்கு முன்பு அதாவது 5-5-2015 அன்று விண்ணப்பித்தேன். உலக அளவில் இதுபோன்ற கண்டுபிடிப்பை யாரும் செய்யவில்லை என்பதை உறுதி செய்த பிறகே எனக்கு சமீபத்தில் 22-9-2022 அன்று மத்திய அரசு காப்புரிமை வழங்கியது.

இந்த கண்டுபிடிப்பிற்காக நான் அதிக அளவில் செலவு செய்திருந்தாலும் 7 வருட போராட்டங்களுக்கு பிறகு எனக்கு மத்திய அரசின் காப்புரிமை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story