சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் கொண்டாட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பிறகு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதனால் நீர் நிலைகளில் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டு உள்ள இடத்தில் மட்டும் சிலைகளை கரைத்து, உரிய விதிமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் கலவையால் செய்த விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்புக்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சிலைகளில் வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம், எண்ணெய் பூச்சுக்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story