சமத்துவ பொங்கல் விழா


சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:17:05+05:30)

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டார்.

பொங்கல் விழா

கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பொங்கல் இனிப்பை வழங்கி, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் முன்னிலை வகித்தார்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

தமிழர் பண்டிகையில் மிகவும் முக்கியமான பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையாகும். விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிர் செய்து, அறுவடை செய்த பொருட்களை கொண்டு பொங்கல் வைத்து தெய்வங்களை வணங்குவதும், விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட காளைகளை போற்றி, மாட்டுப்பொங்கலும், கன்றுகளை போற்றும் விதமாக காணும் பொங்கலும் கொண்டாடி வருகிறோம். அதன் அடிப்படையில் தமிழக அரசு சமத்துவ பொங்கலை அனைத்து ஊராட்சிகளிலும் கொண்டாட அறிவுறுத்தி உள்ளது.

புகையில்லாத போகி

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும். தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு போதிய மழை பெய்து, நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து செழிப்புடன் வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோலப்போட்டி

தொடர்ந்து கலெக்டர் தலைமையில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் அலுவலர்களுக்கு கோலப்போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜாகீர்உசேன், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன், தாசில்தார் சம்பத், ஒன்றிய குழு உறுப்பினர் கலா, ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளா மற்றும் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story