ஆணும் பெண்ணும் சமம் என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை - அமைச்சர் பொன்முடி


ஆணும் பெண்ணும் சமம் என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை - அமைச்சர் பொன்முடி
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் செய்த பல நல்ல திட்டங்களை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவிமுருகன் ஆகியோரால் கட்டப்பட்ட தேவிமுருகன் திருமண மண்டபத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி திறந்து வைத்தார். பின்னர், அம்மண்டபத்தில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த 7 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

திருக்கோவிலூர் நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருமண மண்டபத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திருமண மண்டபத்தை பார்க்கும் பொழுது எனது பேரக்குழந்தையின் திருமணத்தையும் இங்கு நடத்திப் பார்க்க ஆசைப்படுகிறேன்.

திருமண விழா கண்ட புதுமண தம்பதிகள் நீங்கள் பெரும் குழந்தைகளை நல்ல பண்பாட்டுடன் வளர்த்து, நல்ல முறையில் கல்வி கொடுத்து, எதிர்காலத்தில் சிறந்த பிள்ளைகளாக உருவாக்க பாடுபடுங்கள். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் செய்திட்ட நல்ல பல திட்டங்களை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து திருமண உதவி திட்டத்தை நிறுத்தி விட்டதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதற்கு மாறாக அரசு பள்ளிகளில் பிளஸ் -2 படித்து உயர் கல்வி பயில செல்லும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இது உலகம் போற்றும் ஒரு உன்னத திட்டமாகும். ஆணும், பெண்ணும் சமம் என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கையாகும். பெண்கள் அனைவரும் படித்து வாழ்வில் உயர வேண்டும் என்பதே நோக்கமாகும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


Next Story