சமத்துவ பொங்கல் விழா
கூகுடி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கூகுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் சிகரம் தொடுவோம் அமைப்பும் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடியது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ஊராட்சி அலுவலகம் முன்பு 3 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான கோலப்போட்டி, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஓட்டப்பந்தயம், அதிர்ஷ்ட கட்ட போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மங்கலக்குடி ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம், கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் சிகரம் தொடுவோம் அமைப்பின் தலைவர் அந்திவயல் ராதா, ஊராட்சி துணைத்தலைவர் ரெத்தினவள்ளி காளீஸ்வரன், கூகுடி கிராமத்தலைவர் திருஞானசம்பந்தம், கிராம உதவியாளர் புஷ்பா, ஊராட்சி செயலாளர் மைக்கேல், கிராம பொது மக்கள், சிகரம் தொடுவோம் அமைப்பின் நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சிகரம் தொடுவோம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தீபா நன்றி கூறினார்.