சமத்துவ பொங்கல் விழா
கள்ளக்குறிச்சியில் சமத்துவ பொங்கல் விழா குடும்பத்துடன் கலெக்டர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வேட்டி-சட்டை அணிந்து தனது மனைவி சாந்திபிருயாவுடன் கலந்து கொண்டார். பின்னர் அவர்கள் மஞ்சள்கொத்து, கரும்பு, பழங்களுடன் மண்பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வழிந்ததும் அங்கே கூடி நின்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பொங்கலோ பொங்கல் என கோஷம் எழுப்பியபடி சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவை யொட்டி அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு கோலப்போட்டி, பேச்சு, ஓவியம், உறியடி ஆகிய போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, உதவி ஆணையர் கலால் ராஜவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, தாசில்தார் சத்தியநாராயண் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.