சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்


சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
x

கோர்ட்டு, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

கோர்ட்டு, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வள்ளியூர் நீதிமன்றம்

வள்ளியூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷாத் பேகம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆன்ஸ்ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் குலவையிட்டு பொங்கல் இட்டனர். பின்பு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை வரவேற்று பேசினார் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து ஒற்றுமையோடு சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர். மேலும் பல்கலைக்கழகத்தின் சார்பில் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு பாரம்பரிய போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

ராணி அண்ணா கல்லூரி

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு, கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கினார். கல்லூரி மாணவிகள் பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், வெல்லம், பச்சரிசி போன்றவற்றை வைத்து பொங்கல் இட்டனர். கல்லூரி உள்ள அனைத்து துறை மாணவியரும் தங்கள் துறை சார்பாக 20 பொங்கல் பானை வைத்து பொங்கல் விட்டனர். பொங்கல் பொங்கி வந்த போது மாணவிகள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கோஷம் இட்டனர். கல்லூரி மாணவிகள் கரகாட்டம், ஒயிலாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மாணவிகள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் அனைவரும் பாரம்பரிய சேலை அணிந்து வந்திருந்தனர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story