சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஆத்தூர்
ஆத்தூர் நகர பஞ்சாயத்து சார்பில் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர பஞ்சாயத்து தலைவர் கமாலுதீன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முருகன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் அர்ச்சகர் ராமகிருஷ்ண ஐயர், சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை செல்வன் அடிகளார், வடக்கு ஆத்தூர் ஜூம்மா பள்ளி இமாம் அப்துல் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், ஆத்தூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் தமிழ் அரசன், ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் சி.பி.செல்வம், நகர அ.தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம,் அவை தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் ஆத்தூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் பக்கீர் முகைதீன், செயலர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.இதனை ஒட்டி அலுவலகம் கரும்புகளாலும் வாழை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் நிர்வாக அதிகாரி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகர திமுக செயலாளர் நவநீத பாண்டியன், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி யூனியன் அலுவலகம்
.தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு யூனியன் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். யூனியன் துணைத் தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் மேலாளர் பாலமுருகன் வரவேற்றார்.
கூட்டத்தில், மாப்பிள்ளையூரணி பகுதியில் பிள்ளையார்கோவில் ஜாஹீர் உசேன் நகர், சமீர்வியாஸ் நகர், பூபாண்டியாபுரம், பாலதாண்டாயுத நகர், ராஜபாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் தார்சாலை பேவர்பிளாக் அமைத்தல் அடிபம்பு அமைத்தல் மற்றும் தளவாய்புரம் குமாரகிரி கூட்டுடன்காடு அள்ளிக்குளம், கோரம்பள்ளம், அய்யன்டைப்பு, மறவன்மடம் சேர்வைகாரன்மடம் குலையன்கரிசல் உள்ளிட்ட 38 பகுதியில் புதிய பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட மொத்தம் 42 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆபிரகாம் தனசிங், பொறியாளர் தளவாய், மேற்பார்வையாளர்கள் முத்துராமன் சுப்பிரமணியன், உள்பட பல கலந்து கொண்டனர். பின்பு சமத்துவ பொங்கல் விழா அலுவலகத்தில் நடந்தது. விழாவை முன்னிட்டு அலுவலகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு யூனியன் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் கா. கருணாநிதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர்கள் ரமேஷ், சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் வள்ளி ராஜ், காஜா நஜூமுதீன், முருகன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு தலைமை டாக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையில் டாக்டர்கள் ஜெயஸ்ரீ, அருணா, ஷாம் நெல்சன், கண்காணிப்பாளர் செல்வ சீலன் ராமச்சந்திரன், செவிலியர் பிரகாசி சுதா உள்பட செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர்.