உபகரணங்கள் வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடந்தது.
இட்டமொழி:
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மற்றும் நாங்குநேரி வட்டார வளமையம் சார்பில் நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மாற்று திறனுடைய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பங்கேற்றனர். இதில் உடல் இயக்க குறைபாடு, கண், காது மற்றும் மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கு அதை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, யு.டி.ஐ.டி. அட்டை, இலவச பேருந்து பயண அட்டை, தொடர்வண்டி இலவச பயண அட்டைகள் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் நல அலுவலகம் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் இக்னிஷியஸ் ஆல்பர்ட் தலைமையில், வட்டார கல்வி அலுவலர்கள் செபஸ்தியாயி, சங்கீதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சு.புஷ்பலதா, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர்.