318 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்


318 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்
x

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 318 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 318 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உபகரணங்கள்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட நிர்வாகமும், அலிம்கோ நிறுவனமும் இணைந்து நடத்தினர்.

கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.

சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கி பேசுகையில், தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான் உடல் ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்று பெயரை சூட்டினார். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் ஆட்சியை நடத்தி வருகிறார் என்றார்.

ரூ.28 லட்சம் மதிப்பில்...

சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 46 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை எடுத்து கொண்ட முயற்சியின் காரணத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை நேரில் சந்தித்து இந்த திட்டங்களை பெற்று தந்து உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்க மத்திய அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் 318 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி, காதொலி கருவி, இருச்சக்கர வாகனம், செல்போன், செயற்கை கால் உள்பட பல உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதிராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர்கள் அய்யாக்கண்ணு, தமயந்தி ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், அலிம்கோ நிறுவன அலுவலர்கள் அசோக், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story