ரூ.10.38 லட்சம் போதைப்பொருட்கள் தீ வைத்து அழிப்பு
தீவட்டிப்பட்டி அருகே ரூ.10.38 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் தீவைத்து அழிக்கப்பட்டன.
ஓமலூர்
தீவட்டிப்பட்டி அருகே ரூ.10.38 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் தீவைத்து அழிக்கப்பட்டன.
போதைப்பொருட்கள்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கன்டெய்னர் லாரியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் போன்ற போதைப்பொருட்கள், ஊதுபத்தி பாக்கெட்டுகளுக்கு அடியில் பதுக்கி கடத்தி வரப்பட்டது. சேலம் மாவட்டம், ஜோடுகுளி பகுதியில் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
இதில் ரூ.10.38 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கன்டெய்னர் லாரி மற்றும் காரையும் கைப்பற்றினர். மேலும் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு கெங்கேரி பகுதியை சேர்ந்த கோபால் (வயது 38), மஞ்சுநாத் (37), கிரீஸ் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தீ வைத்து அழிப்பு
இது தொடா்பான வழக்கு ஓமலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கன்டெய்னர் லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 10.38 லட்சம் மதிப்பிலான ஒரு டன் 320 கிலோ போதைப்பொருட்களை அழித்திட ஓமலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில், நேற்று தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கோணம்பட்டி ஏரியில் போதைப்பொருட்களை தீ வைத்து எரித்து அழித்தனர்.