ஈரோடு கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு


ஈரோடு கலெக்டர் அலுவலக பொருட்களை   ஜப்தி செய்ய உத்தரவு  கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு
x

கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு

ஈரோடு

ஈரோடு கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டு வசதி வாரியம்

ஈரோடு கொல்லம்பாளையத்தில் 5.45 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியத்துக்காக மாவட்ட வருவாய் அலுவலகம் மூலம் கடந்த 1986-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்தின் உரிமையாளர்களாக நடராஜன், குப்புவிஜயலட்சுமி, தட்சணாமூர்த்தி, அனிதா, தினேஷ்மூர்த்தி, மணிமேகலை, லட்சுமிநாராயணன், சிந்து ஆகிய 8 பேர் உள்ளனர்.

அந்த நிலத்துக்கு குறைவான மதிப்பீட்டை மாவட்ட வருவாய் துறை நிர்ணயித்ததால், இதை எதிர்த்து ஈரோடு கோர்ட்டில் 8 பேரும் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 900 வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த தொகையை வழங்காததால், நில உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதன்பேரில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி, ஒரு சதுர அடிக்கு ரூ.5 கூடுதலாகவும் மற்றும் பல்வேறு செலவினங்களை கணக்கிட்டு ரூ.51 லட்சத்தை நில உரிமையாளர்களுக்கு பகிர்ந்து வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தொகையையும் வீட்டு வசதி வாரியம் செலுத்தவில்லை. இதனால் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் இதுவரை ரூ.51 லட்சத்தை வழங்காததால், தற்போது வரையிலான காலத்துக்கு வட்டி, அனுதாபத்தொகை சேர்த்து ரூ.78 லட்சத்து 23 ஆயிரத்து 635 செலுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

நிறைவேற்று மனு தாக்கல்

இந்த உத்தரவை அமலாக்க கோரி, ஈரோடு முதன்மை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள், 'நிறைவேற்று மனு' தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் 50, தட்டச்சு எந்திரம் 50, பீரோ 50, மின்விசிறி 100, மரமேஜை 200, இரும்பு மேஜை 200, சேர் 500, லிப்ட் 4 என ரூ.35 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில் கோர்ட்டு அமீனா ரவிக்குமார் தலைமையில் கோர்ட்டு ஊழியர்கள், நில உரிமையாளர்கள், அவர்களது வக்கீல் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்வதற்காக நேற்று மதியம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷிடம் கோர்ட்டு ஜப்தி உத்தரவை வழங்கினர்.

பரபரப்பு

இதற்கிடையில் இதுபற்றி மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோரிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் பேசிவிட்டு, கோர்ட்டு ஊழியர்களிடம் அவகாசம் கேட்டார்.

இதுபற்றி, நில உரிமையாளர்கள் தரப்பு வக்கீல் சுப்பிரமணியம் கூறும்போது, 'கலெக்டரிடம் பேசிய அதிகாரி, வருகிற 7-ந்தேதி வீட்டு வசதி வாரிய கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் இதுபற்றி தெரிவித்து, உடனடியாக பணத்தை விடுவிக்க கலெக்டர் உத்தரவாதம் தெரிவித்துள்ளார். எனவே 7-ந்தேதி வரை அவகாசம் கேட்டுள்ளார். இதனால் நோட்டீஸ் மட்டும் வழங்கிவிட்டு திரும்பி உள்ளோம். பணம் கிடைக்காவிட்டால் வருகிற 8-ந்தேதி மீண்டும் ஜப்திக்காக வருவோம்' என்றார்.

இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story