ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் அனைவரும் பணிக்கு திரும்பினர்
போராட்டம் வாபஸ்
ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று நேற்று பணிக்கு திரும்பினர்.
காத்திருப்பு போராட்டம்
ஈரோடு மாநகர் பகுதியில் பணியாற்றும் 1,800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் இடம் ஒப்படைக்கும் அரசாணையை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரியும் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் பணியை புறக்கணித்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்றதால் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கியது.
அமைச்சர் பேச்சுவார்த்தை
4-வது நாளான நேற்று முன்தினம் ஒப்பந்த பணியாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஒப்பந்த பணியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், 'தமிழக அரசின் நகராட்சிகள் நிர்வாகம் வெளியிட்டுள்ள அரசாணையை அமல்படுத்த கால அவகாசம் உள்ளதால் அதற்குள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணப்படும். பொது மக்களின் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்' கூறினார்.
வாபஸ்
இதைத்தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தனர்.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ஈரோடு மாநகர பகுதியில் உள்ள 60 வார்டுகளுக்கும் நேற்று தூய்மை பணியாளர்கள் சென்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.