ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும்;முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும்;முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

டீ போட்ட முன்னாள் அமைச்சர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஈரோடு பெரியார் வீதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள ஒரு டீ கடைக்கு சென்ற அவர் டீ போட்டு கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து அருகில் உள்ள கடையில் துணிகளை அவர் இஸ்திரி போட்டு கொடுத்தார்.

இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வியூகம்

இந்த தேர்தலை ஆளும் கட்சி பண பலம், அதிகார பலம் கொண்டு சந்தித்து வருகிறது. நாங்கள் சத்தியத்தையும், உண்மையையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம். இதனால் எங்கள் பிரசாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எத்தனை சுமைகள் வந்தாலும் அதனை தாங்கி கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்தோம். எடப்பாடி பழனிசாமி வகுத்து கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் இந்த தி.மு.க. அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்று 520 திட்டங்களில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுப்பதாக கூறினார்கள். அதையும் நிறைவேற்றவில்லை. மடிக்கணினி வழங்கும் திட்டம் கேள்விக்குறியாக இருக்கிறது.

இரட்டை இலை சின்னம்

முதல் தலைமுறையினர் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

பல்வேறு தடைகளை தாண்டி பல்வேறு துரோகங்களை தாண்டி எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ளார். திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவதற்கு இந்த தேர்தல் ஒரு அச்சாரமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story