ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும்;முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நம்பிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும் என்று முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும் என்று முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.
தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து, ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஜோசப்தோட்டம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
கழிவுநீர் பிரச்சினை
அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த பகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகமாக உள்ளது. இந்த முறை இங்கு மாற்றத்தை காண்கிறோம். அவர்கள் எங்களை வரவேற்கும் விதத்தை பார்த்தால் கே.எஸ்.தென்னரசுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
குறிப்பாக இங்குள்ள சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இங்குள்ள கழிவுநீரை ராமநாதபுரம் அருகில் கடலில் கலக்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் இந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டத்தை ரூ.700 கோடியில் செயல்படுத்த கே.எஸ்.தென்னரசு தயாராக உள்ளார்.
இரட்டை இலைக்கு சொந்தமாகும்
ஈரோட்டில் உள்ள அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு தான். கே.எஸ்.தென்னரசு மட்டுமே இந்த தொகுதியில் ரூ.500 கோடிக்கும் மேல் பல்வேறு பணிகளை செய்து கொடுத்திருக்கிறார். இதை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்கிறோம். எந்த நேரத்திலும் சென்று சந்திக்கக்கூடிய வேட்பாளராக தென்னரசு உள்ளார்.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் இன்னும் 13 நாட்கள் பிரசாரம் முழுவீச்சுடன் நடைபெறும். வேட்பாளர் வலிமையால், கட்சியின் வலிமையால், அ.தி.மு.க.வின் சாதனைகள் வலிமையால் ஈரோடு கிழக்கு தொகுதியை வென்றெடுப்போம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.