ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது, யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

த.மா.கா. சார்பில் யுவராஜா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவர், 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். எனவே, இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?, அல்லது அ.தி.மு.க.வே களம் இறங்குமா?, அல்லது கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான பா.ஜ.க. போட்டியிடுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.

ஜி.கே.வாசனுடன் சந்திப்பு

இந்த நிலையில், நேற்று காலை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை, அ.தி.மு.க. நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பென்ஜமின் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் எந்தக்கட்சி போட்டியிடுவது?, வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல் வியூகம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ளது. அ.தி.மு.க.வுடன் சுமுக உறவு நீடிப்பதுடன் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நேரத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். இது கூட்டணி கட்சி தலைவர்களின் கடமையாகும். இந்த நிலையில், அ.தி. மு.க. நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

வேட்பாளர் அறிவிப்பு எப்போது?

2 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். அப்போது, இடைத்தேர்தல் வியூகம், அரசியல் சூழ்நிலை குறித்து பேசினேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் இலக்கு, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். மக்கள் மனநிலையை பிரதிபலிக்காத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவும் உள்ளது. இது எங்கள் கூட்டணி வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஓரிரு நாளில், கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசி வெற்றிக்கான வியூகம் வகுப்போம். அதன்பிறகு, வேட்பாளரும் அறிவிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story