ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுமா? டி.டி.வி. தினகரன் பேட்டி


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுமா? டி.டி.வி. தினகரன் பேட்டி
x

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுகிறதா என்பதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பதிலளித்தார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதேநேரத்தில் அ.ம.மு.க. போட்டியிட வேண்டும் என்ற உணர்வில்தான் நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுவது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நல்ல செய்தியை வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சொல்கிறேன். அ.ம.மு.க. போட்டியிடுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது எங்கள் குறி. மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவு வந்த பிறகுதான் தெரியும்.

இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு

அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்து நிற்கிறது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலைதான் இருக்கிறது. 2 பேரிடையே சமரசம் ஏற்பட்டு, தேர்தல் ஆணையத்தை அணுகினால் இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நான் எதார்த்த நிலையைத்தான் சொல்கிறேன்.

இதே நிலை தொடர்ந்தால் இரட்டை இலை முடக்கப்பட்டுவிடும். அதுபற்றி இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். இரட்டை இலை இல்லை என்றால், எடப்பாடி பழனிசாமி அணியினர் பணபலத்தை வைத்துதான் தேர்தலில் நிற்பார்கள்.

இந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிடவும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் என்றும் கவலைப்பட்டது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story