ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்: தே.மு.தி.க. தனித்து போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், கட்சி வளர்ச்சி, உட்கட்சி தேர்தல், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-
திருமகன் ஈவேரா இறந்த சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் இவ்வளவு அவசரமாக இடைத்தேர்தல் வைப்பதற்கான அவசியம் என்ன?. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பா.ஜ.க இன்னும் தங்கள் நிலையை அறிவிக்கவில்லை.
தனித்து போட்டி
அ.தி.மு.க. 4 பிரிவுகளாக இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு கட்சி சின்னம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு இப்போது வரை பதில் கிடைக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க தனித்து களம் காண்கிறது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தற்போது தே.மு.தி.க. எந்த கூட்டணியிலும் இல்லை. அ.தி.மு.க.வின் 2 அணியினர், பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தால் அதனை மனதார வரவேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமோக வெற்றி பெறும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வின் வெற்றிவாய்ப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011-ம் ஆண்டு தே.மு.தி.க வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி பலம், அதிகார பலம், பண பலத்தை எதிர்த்து தே.மு.தி.க தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும்' என்றார்.
விஜயகாந்த் வேண்டுகோள்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், 'தே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர். இவருக்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, தேர்தல் பணியினை சிறப்பாக செய்து வெற்றி பெற செய்யவேண்டும்' என்று கூறியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.