ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை;வேட்பாளரை தேர்வு செய்ய கருத்து கேட்டார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். அவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். அவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.
இரட்டை இலை சின்னம்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார்.
தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.
நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
தீவிர ஆலோசனை
இத்தகைய பரபரப்பான தேர்தல் களத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் தீவிர ஆலோசனையில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
அவர் நேற்று ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, பாலகிருஷ்ணன் உள்பட கட்சியினர் பலரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.
இன்று அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வின் பலம், கடந்த 1½ ஆண்டுகளில் தி.மு.க. நிறைவேற்றிய திட்டங்கள், செயல்படுத்தப்படாத திட்டங்கள் ஆகியன குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. வேட்பாளருக்கு நிகராக அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், அந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ள நபரை தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
நேற்று காலையில் தொடங்கிய கூட்டம் மாலை வரை நடைபெற்றது.
இன்றும் (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது.
அதன்பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.