ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2023 1:00 AM IST (Updated: 24 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் குறித்த விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருமான வரி

தொடர்ந்து பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டா் கிருஷ்ணனுண்ணி பேசும்போது கூறியதாவது:-

தேர்தலுக்காக பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளன. வாகன சோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். வாகன சோதனையின்போது பணம், மது, ஆயுதங்கள், வாக்காளர்களை கவரும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டும். தனிநபர் ரூ.50 ஆயிரம் வரை எந்தவொரு ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்லலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்படும் நேரத்தில் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் வருமான வரி துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலமாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதேசமயம் ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லலாம்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வரும் சூழ்நிலையில் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். நேரடியாக பறக்கும் படையினர் வீடு, குடோன் உள்ளிட்ட பகுதிகளை சோதனையிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள், அரசியில் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story