ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்;அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுபோட்டு விட்டு வெளியே வந்த அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, "25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்", என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுபோட்டு விட்டு வெளியே வந்த அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, "25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்", என்று கூறினார்.
அ.தி.மு.க. வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கருங்கல்பாளையம் கல்லு பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக வந்தார். அவர் சிறிதுநேரம் வரிசையில் காத்திருந்தார். அப்போது அவருக்கு முன்னால் இருந்தவர்கள் அவரை ஓட்டு போட செல்லுமாறு கூறியதால், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்று தனது ஓட்டை பதிவு செய்தார்.
அதன்பிறகு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது. 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன். கொரோனா காலத்தில் நான் எதுவும் செய்யவில்லை என்று என்னை பற்றி கூறி வருகிறார்கள். ஆனால் எங்கள் தொகுதி மக்கள் 70 ஆயிரம் பேருக்கு அரிசி வழங்கி உள்ளேன். ரேஷன் கடை மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்பட்டது.
அமைதியாக நடக்கிறது
தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது. வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மையின் தரம் குறித்து அ.தி.மு.க. தலைமையின் சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் கடைபிடிக்கப்படுகிறது.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சி என எந்த கட்சியாக இருந்தாலும் பெரிய அளவில் பிரச்சினை வராது. அநாகரிகமாக ஒருவரை ஒருவர் திட்டி பேசிக்கொள்ள மாட்டார்கள். அடிமட்ட தொண்டர்களுக்குள் ஒருசில நேரம் லேசான சண்டை வரலாம். தலைவர்களுக்குள் அதுபோன்ற பிரச்சினை இருக்காது. எனவே இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.