ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:தி.மு.க.-காங்கிரஸ் யார் போட்டியிட்டாலும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம்;அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் யார் போட்டியிட்டாலும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் யார் போட்டியிட்டாலும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
எம்.எல்.ஏ. மறைவு
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா, த.மா.கா. சார்பில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜா ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
முடிவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 994 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இதற்கிடையில் கடந்த 4-ந்தேதி மாரடைப்பு காரணமாக திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க.வே நேரடியாக போட்டியிடுமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. போட்டியா?
இதற்கிடையே ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சு.முத்துசாமி கலந்து கொண்டார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. போட்டியிடுமா? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறும்போது, 'தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.
மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாலும் சரி அல்லது தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் அந்த வேட்பாளர் வெற்றிபெற தி.மு.க. பாடுபடும்' என்றார்.