ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் விழா


ஈரோடு கோட்டை  ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் விழா
x

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் விழா நடந்தது.

ஈரோடு

ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63 நாயன்மார்கள் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கோவிலின் முன்பு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி சாமிக்கும், சேரமான் பெருமாள் நாயனாருக்கும் பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலில் உள்ள 63 நாயன்மார்களுக்கும் மலர்கள் சூடப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வெள்ளை யானை சப்பரத்தில் சுந்தரமூர்த்தி சாமி எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். பிறகு கோவிலை சுற்றிலும் திருவீதி உலா சென்று நடராஜர் சன்னதிக்கு வந்தடைந்தார். இதேபோல், சேரமான் பெருமாள் நாயனார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தில் இருந்து திருவீதி உலாவாக கோவிலில் உள்ள நடராஜர் சன்னதிக்கு வந்தடைந்தார்.

கோவிலில் மாகேஸ்வர பூஜை வாரணாம்பிகை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்களை சிவனாக பாவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பக்தர்களின் மீதும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 7-ம் திருமுறை சுந்தரர் தேவாரம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதில் தென்சேரிமலை திருநாவுக்கரசர் நந்தவன திருமடம் முத்து சிவராமசாமி கலந்துகொண்டு பேசினார். இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story