ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் ஓசூர், திருப்பதி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விசாரணைக்கு ஆஜர்
ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்
ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக ஓசூர், திருப்பதி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
கருமுட்டை விற்பனை
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இருந்து சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாய், கள்ளக்காதலன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த ஈரோடு கைகாட்டி வலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த மாலதி (வயது 36) போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த கைகாட்டிவலசு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஜான் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை தீவிரம்
இதையடுத்து இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் ஈரோடு மற்றும் பெருந்துறை தனியார் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கருமுட்டை விற்பனை வழக்கில் வேறு சிறுமிகள் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா? கருமுட்டை தானம் தனியார் கருத்தரித்தல் மையங்களில் முறைப்படி கடைபிடிக்கப்படுகிறதா? பாதிக்கப்பட்ட சிறுமியை எந்தெந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருமுட்டை எடுத்துள்ளனர்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்மன்
அதன்படி ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் கிளைகள் வெளி ஊர்களிலும் செயல்பட்டு வருகிறது. அங்கும் பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்து சென்று கருமுட்டை எடுக்கப்பட்டதா? என்றும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் சேலம், ஓசூர் ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆஜர்
இதில் ஓசூர் மற்றும் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த டாக்டர்கள், ஊழியர்கள் 5 பேர் தனித்தனி காரில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சில ஆவணங்களையும் எடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரியிடம் தாங்கள் கொண்டு வந்த ஆவணங்களை கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக கிடுக்குப்படி விசாரணை மேற்கொண்டனர்.
சட்டரீதியான நடவடிக்கை
இதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
18 வயதுக்கும் குறைவான சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட புகார் பெறப்பட்டவுடன் ஈரோடு போலீசார் விரைந்து செயல்பட்டு 4 பேரை கைது செய்துள்ளனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஒசூர், திருச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும் 5 ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. ஈரோடு, பெருந்துறை தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை முடிந்துள்ளது.
குற்றப்பத்திரிகை
மருத்துவ பணிகள் இயக்குனரக டாக்டர்கள், வல்லுனர் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ ரீதியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு இன்று (அதாவது நேற்று) இதுதொடர்பாக ஒரு மருத்துவ குழுவை அமைத்துள்ளது.
தவறு நடந்ததாக மருத்துவ குழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்கும்பட்சத்தில் அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
புகார் தெரிவிக்கலாம்
ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களும் நேரில் ஆஜராக உள்ளனர். அவர்களிடம் இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்ட விரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.