ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில்  ஒப்பந்த பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x

உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மை செய்வது, காவலாளர்களாக பணியாற்றுவது, நோயாளிகளை ஸ்ரெட்ச்சரில் வைத்து அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவில் திடீரென ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய, விடிய நடந்த இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரியில் தூய்மை பணிகள் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

சம்பளம்

இதுகுறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.707 வீதம் மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஒரு நாளுக்கு ரூ.280 வீதம் மாதத்துக்கு ரூ.8 ஆயிரத்து 400 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அரசு நிர்ணயம் செய்த ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை உள்ளிட்டவை வழங்கப்படாமல் உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story