ஈரோடு காரைவாய்க்காலில் பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் பணிகளை விரைந்து முடித்து பாலத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ஈரோடு காரைவாய்க்காலில்  பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் பணிகளை விரைந்து முடித்து பாலத்தை திறக்க வேண்டும்  பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2022 1:00 AM IST (Updated: 1 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு

ஈரோடு காரைவாய்க்கால் பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் பணிகளை விரைந்து முடித்து பாலத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்மட்ட பாலம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்து சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு காந்திஜி ரோட்டில் இருந்து பீளமேடு வரை ரூ.31 கோடியே 80 லட்சம் செலவில் கான்கிரீட் தளம், சுற்றுச்சுவர் மற்றும் காரைவாய்க்கால் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது.

இந்த பணிகள் அனைத்தும் 1½ ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதனால் காரைவாய்க்கால் பகுதியில் இருந்து பழைய ரெயில் நிலையம் செல்லும் ரோடு கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. எனவே அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

காரைவாய்க்கால் பகுதியில் பெரும்பள்ளம் ஓடை குறுக்கே தரைப்பாலம் இருந்தது. மழை காலங்களில் பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த பாலத்தை பொதுமக்கள் கடந்து செல்ல முடியாது. எனவே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

3 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் முடிக்கப்படவில்லை. மேலும் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருவதால் நாங்கள் வெண்டிப்பாளையம் மற்றும் காளை மாட்டு சிலை பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே அனைத்து பணிகளையும் முடித்து உடனடியாக பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிலத்தடி நீர்மட்டம்

இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் கூறும்போது, 'மேற்கண்ட பணிகளை 1½ ஆண்டுகளில் முடிக்கக்கோரி ஒப்பந்ததாரரிடம் கூறப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் தொடர் மழை காரணமாக பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம், சுற்றுச்சுவர் மற்றும் பாலம் அமைக்கும் பணி தாமதமானது.

இதற்கிடையில் பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்று விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சில மாதங்கள் பணிகள் நடைபெறவில்லை. அதைத்தொடர்ந்து ஓடையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பகுதிகளில் 10 அடி இடைவெளியில் பிளாஸ்டிக் குழாயை நிலத்துக்கு அடியில் பதிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உயர்மட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும்' என்றார்.


Next Story