ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில்சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு
மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குடிநீர் வசதி
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். ஈரோடு ரங்கம்பாளையம் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகரில் இரணியன் வீதி, நரிக்குறவர் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் பெயிண்டிங் வேலை மற்றும் பேன்சி பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் 2 குடிநீர் குழாய்கள் மட்டும் உள்ளன. இந்த குழாயில் வாரத்தில் ஒரு நாள் அதுவும் ஒரு மணி நேரம் கூட தண்ணீர் வருவதில்லை. இதனால் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டுக்கான தண்ணீரை எடுத்து வருகிறோம். இதுபற்றி எங்கள் வார்டு கவுன்சிலர், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் கூடுதலாக குடிநீர் குழாய் அமைத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வாகன வசதி
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்களில் மதுபானங்களை குடித்து விட்டு வாகனங்களில் செல்லும் மது பிரியர்களுக்கு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த அபராத தொகையை செலுத்த தவறினால் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து அதை ஏலம் விட்டு தொகை வசூலிக்கப்படுகிறது. எனவே மது பிரியர்கள் இதை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு டாஸ்மாக் பார்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டும்.
மேலும் மது அருந்திவிட்டு செல்பவர்கள் சில நேரம் விபத்தில் சிக்கி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில் மது பிரியர்களுக்கு என்று அரசு தனியாக வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
மாதாந்திர உதவித்தொகை
இதேபோல் மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில், பணியின்போது இறந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூ.5 லட்சத்துக்கான ஒப்பளிப்பு ஆணையினையும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அகவை முதிர்வு தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் பெறுவதற்கான ஆணையையும் மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்.
இதேபோல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள முடநீக்கு கருவி, ஊன்று கோல் மற்றும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கியமைக்கான ஆணையும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரெஜினால் மேரி, சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன், தனித்துணை கலெக்டர் குமரன், துணை கலெக்டர் காயத்ரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.