ஈரோடு சம்பத்நகரில் சோதனை அடிப்படையில் மாலைநேர உழவர் சந்தை
மாலைநேர உழவர் சந்தை
ஈரோடு சம்பத்நகரில் சோதனை அடிப்படையில் மாலைநேர உழவர் சந்தை செயல்பட தொடங்கியது.
உழவர் சந்தை
தமிழகத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களான காய்கறிகள், பழங்களை பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. காலையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாலை நேரத்திலும் உழவர் சந்தைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி ஈரோடு சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தையில் முதல்கட்டமாக மாலை நேர விற்பனை நேற்று தொடங்கியது. இதில் மதிப்பு கூட்டப்பட்ட தானிய வகைகள் விற்பனை செய்யப்பட்டன.
தானியங்கள்
இதுகுறித்து வேளாண் வணிகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு சம்பத்நகரில் சோதனை அடிப்படையில் மாலை நேர உழவர்சந்தை திறக்கப்பட்டது. காலையில் உழவர்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள் மாலை நேர உழவர் சந்தைக்கு வரமாட்டார்கள். பாரம்பரியமான விளை பொருட்களான தானியங்கள், தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மாலையில் அறுவடை செய்யப்படும் விளைபொருட்கள் போன்றவை விற்பனைக்காக கொண்டு வரப்படும். விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பயறு வகைகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள், காளான், சமையல் எண்ணெய், சத்துமாவு வகைகள், தின்பண்டங்கள் ஆகியன விற்பனை செய்யப்படும்.
இந்த மாலைநேர உழவர் சந்தையை விரைவில் முதல்-அமைச்சர் முறையாக திறந்து வைப்பார். அதுவரை சோதனை அடிப்படையில் மாலை நேர உழவர் சந்தை செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.