ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன் மற்றும் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா 29-ந்தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
கடந்த 1-ந்தேதி இரவு 8 மணிக்கு 2 கோவில்களின் முன்பும் கம்பங்கள் நடப்பட்டன. இந்த கம்பத்துக்கு தினமும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். அதைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நடக்கிறது.
நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கோவில் கரகம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணிக்கு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். வருகிற 14-ந்தேதி இரவில் கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது.
அப்போது கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. 15-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல், சாமி திருவீதி உலாவும் இரவு 7 மணிக்கு சாமி திருக்கோவில் நிலை சேருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.