ஈரோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
ஈரோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
ஈரோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
விபத்து வழக்கு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவர் கடந்த 7-ந் தேதி ஈரோடு மேட்டூர்ரோட்டில் 2 சக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியாக சென்ற 70 வயது மூதாட்டி ஒருவர் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இந்த விபத்து குறித்து கடந்த 8-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தொலைபேசியில் பிரகாசை தொடர்பு கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக நேரில் வரும்படி அழைத்தார். அவர் கூறியதைபோலவே 9-ந் தேதி பிரகாஷ், 2 ஜாமீன்தாரர்கள், ஜாமீன் தொகையுடன் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். காவல்நிலையை நடைமுறைகளுக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை பிரகாஷ் செலுத்தினார்.
பணி இடைநீக்கம்
2 சக்கர வாகனத்தை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், பிரகாசிடம் கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் கடந்த 15-ந் தேதி பிரகாஷ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.
அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரை கைது செய்தனர்.
இந்தநிலையில் லஞ்சம் வாங்கியதாக கைதான அவரை பணி இடைநீக்கம் செய்ய ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் டி.ஐ.ஜி. சரவணக்குமார், கைதான சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரை பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.