ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில்தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மதியம் புகார் மனு அளிப்பதற்காக பெண் ஒருவர் வந்தார். அவர் தான் மறைத்து வைத்திருந்த ஒரு பாட்டிலை வெளியே எடுத்தார். திடீரென அந்த பாட்டிலில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், விரைந்து சென்று அவரிடம் இருந்த பாட்டிலை பிடுங்கினர்.
பின்னர் அவரை ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த தனலட்சுமி (வயது 28) என்பதும், அவருடைய கணவர் ராஜா தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
வழக்கு
கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமியும், ராஜாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவரிடம் உள்ள 2 பெண் குழந்தைகளை தன்னிடம் வழங்கக்கோரி தனலட்சுமி கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி புகார் அளிக்க வந்த தனலட்சுமி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
டீசலை உடலின் மீது ஊற்றிக்கொண்ட தனலட்சுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தீக்குளிக்க முயன்ற தனலட்சுமி மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.