ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 50 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு வந்தது. இது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று 2-வது நாள் கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
350 பசு மாடுகளும், 150 எருமை மாடுகளும் என மொத்தம் 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த மாடுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கேரளா, கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும் விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனம் எளிதில் கிடைக்கிறது. இதன் காரணமாக மாடுகள் வரத்து குறைந்துள்ளதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.