ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை


ஈரோடு காய்கறி மார்க்கெட்டில்  தக்காளி விலை கிடுகிடு உயர்வு  ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை
x

தக்காளி

ஈரோடு

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

விளைச்சல் பாதிப்பு

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு அனைத்து வகையான காய்கறிகளும், பழங்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெய்த கன மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தேவையை பொறுத்து குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வாங்கி சென்றார்கள். நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் ரூ.10 விலை உயர்ந்தது.

ஒரு வாரம்

இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 20 டன் தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துவிட்டது. விவசாய நிலங்களில் பறிக்கும்போதே தக்காளி அழுகி விடுகிறது. தற்போது சுமார் 8 டன் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் விலையும் அதிகரித்தது. மொத்த விற்பனையில் 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.700-க்கு விற்பனையாகிறது. இதேநிலை ஒரு வாரம் தொடர வாய்ப்புள்ளது. எனவே இன்னும் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விளைச்சல் ஏற்பட்டு தக்காளியின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story