ஈரோடு வ.உ.சி. பூங்காவில்காணும் பொங்கல் விழாவுக்காக குவிந்த குடும்ப பெண்கள்;ஆட்டம்-பாட்டம் நடனத்துடன் உற்சாக கொண்டாட்டம்


ஈரோடு வ.உ.சி. பூங்காவில்காணும் பொங்கல் விழாவுக்காக குவிந்த குடும்ப பெண்கள்;ஆட்டம்-பாட்டம் நடனத்துடன் உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2023 3:03 AM IST (Updated: 18 Jan 2023 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் குவிந்த குடும்ப பெண்கள் ஆட்டம்-பாட்டம் நடனத்துடன் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஈரோடு

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் குவிந்த குடும்ப பெண்கள் ஆட்டம்-பாட்டம் நடனத்துடன் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

காணும்பொங்கல்

காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் வாசல் பொங்கல், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கொடிவேரி, கொடுமுடி உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், பெண்கள் மட்டுமே கொண்டாடும் மிக சிறப்பான காணும் பொங்கல் ஈரோடு வ.உ.சி.பூங்காவில் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் காணும் பொங்கல் களை இழந்து காணப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு குறைந்து பொதுமக்கள் இயல்புக்கு திரும்பி வந்து விட்டநிலையில் நேற்று காணும் பொங்கல் களை கட்டியது.

ஆண்களுக்கு அனுமதி இல்லை

நேற்று பகல் 11 மணியில் இருந்தே பெண்கள் வ.உ.சி.பூங்கா நோக்கி வரத்தொடங்கினார்கள். மதியத்துக்குமேல் கும்பல் கும்பலாக பெண்கள் கூட்டம் பூங்காவை மொய்த்தது. பூங்காவுக்குள் பெண்களுக்கும் 10 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கும் மட்டுமே அனுமதி என்பதால், மார்க்கெட் இயங்கும் பகுதிக்கு மேல் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தொடக்கத்தில் பூங்காவுக்குள் சென்ற பெண்கள் சிறிது நேரம் காலாற நடந்து விட்டு, தாங்கள் கையில் கொண்டு வந்த கரும்பு, மற்றும் உணவுகளை தங்கள் உறவு பெண்கள், தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட்டனர். இளம்பெண்கள் வழக்கம்போல செல்பி எடுக்க, போட்டியாக குடும்ப பெண்களும் செல்பி எடுக்க தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர சேர கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கியது. பூங்காவுக்குள் குத்தாட்டம் போடும் வகையில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இதனால் பெண்கள் உற்சாகமாக ஆட்டம் போட தொடங்கினார்கள்.

குடும்ப பெண்களின் ஆட்டம்

முதலில் குழந்தைகள், அடுத்து இளம் பெண்கள் என்று தொடங்கிய ஆட்டம் ஒரு கட்டத்தில் குடும்ப பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கல்லூரி மாணவிகளுக்கு நிகராக குடும்ப பெண்கள் சளைக்காமல் ஆட்டம்போட்டனர்.

ஒரு பக்கம் பலூன்களை தட்டி விளையாடும் கும்பல், ஒருபக்கம் நொண்டியடித்து விளையாடும் பெண்கள், கண்கட்டி விளையாட்டு, சுடிதார் சால்வைகளை சுற்றி கயிறு இழுக்கும் போட்டி, பெண் தவில் கலைஞரின் அதிரடி இசை, பாடல் என்று வ.உ.சி.பூங்கா நேற்று உற்சாக மிகுதியால் தள்ளாடியது.

ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பூங்காவில் குவிந்தனர். ஆண்கள் யாரும் இல்லாததால், குறிப்பாக தங்களுக்கு தெரிந்த ஆண்கள், குடும்ப நண்பர்கள் என்று எந்த வகையிலும் தங்களுக்கு தெரிந்தவர்கள் இல்லை என்பதே பெண்களின் உற்சாகத்துக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. சில கும்பல்களில் மாமியார், மருமகள், பேத்தி என்று பலரும் அம்மா, மகள், பேத்தி என்றும் பலர் குடும்பம் குடும்பமாக நடனம் ஆடி மகிழ்ந்திருந்தனர்.

ஊஞ்சல்

சிறு குழந்தைகள் ஊஞ்சலில் ஆடத்தொடங்கினார்கள். அது சற்று நேரத்தில் இளம்பெண்கள், குடும்ப பெண்கள், வயதில் மூத்த பெண்களும் ஆடும் ஊஞ்சலாக மாறியது. பெண்கள் உற்சாகமாக ஊஞ்சல் ஆடியபோது தங்கள் குழந்தை பருவ நினைவுகளுடன் முகமலர்ச்சியுடன் இருந்தனர். இதுபோல் சீசா விளையாட்டிலும் பெண்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

இதுபற்றி பெண் ஒருவர் கூறும்போது, 'ஆண்டுக்கு ஒரு முறை காணும் பொங்கல் விழா, எங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. நாங்கள் இப்படி ஆட்டம் போடுவோம் என்று எங்கள் வீட்டு ஆண்களுக்கும் தெரியும். ஆனால், எங்கள் சந்தோஷத்துக்கு தடையாக இருக்காமல் எங்களை பூங்கா வாசல்வரை கொண்டு விட்டு விட்டு, மாலையில் நாங்கள் திரும்பும்போது எங்களை அழைத்துச்செல்கிறார்கள். உற்சாகமாக நாங்கள் இங்கே ஆட்டம் போட்டாலும், எங்கள் வீட்டு ஆண்கள்தான் எங்கள் இந்த சுதந்திர ஆட்டத்துக்கு காரணம்' என்றார்.

உற்சாகம்

இன்னொரு பெண் கூறும்போது, தினசரி ஓய்வு இல்லாமல் வேலை செய்கிறோம். குழந்தைகள் வீட்டிலேயே குத்தாட்டம் போடும்போது, நமக்கும் ஆசையாக இருக்கும். ஆனால், முடியாது. இங்கே பாருங்கள், இத்தனை கூட்டம் இருந்தாலும் யாரும் நம்மை கவனிக்காததுபோன்று இஷ்டத்துக்கு ஆடலாம். ஏன் இப்படி ஆடுகிறாய் என்று கேட்க ஆள் இல்லை. இன்னும் ஆடுங்கள் என்று உற்சாகப்படுத்துகிறார்கள். தனிமை, வெறுப்பு, வலி, வேதனை அத்தனையும் மறந்து உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.

கோலாட்டம் ஆடியும், கும்மி அடித்தும் ஆடிய குடும்ப பெண்கள் இளம் பெண்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்தனர். அவர்கள் கூறும்போது, இதுபோன்று காணும் பொங்கல் நாளில்தான் நாங்கள் எங்கள் திறமையை குழந்தைகளுக்கு காட்ட முடிகிறது. எங்கள் முன்னோர் எங்களுக்கு இதுபோல் கற்றுத்தந்தனர் என்றார்கள்.

சந்திரா

கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சந்திரா (வயது 63) கூறியதாவது:-

நான் இசைக்குடும்பத்தை சேர்ந்த குடும்பப்பெண். எனது அப்பா குழந்தைவேல் சிறந்த தவுல் வித்வான். சிறுவயதிலேயே தவில் பயிற்சி பெற்று, இசைத்து வருகிறேன். வெளி நிகழ்ச்சிகளில் வாசிப்பது கிடையாது. காணும் பொங்கலுக்கு கடந்த 45 ஆண்டுளாக பூங்காவுக்கு வருகிறேன். 15 ஆண்டுகளாகத்தான் இந்த கொண்டாட்டத்தில் தவுல் வாசித்து பெண்களை உற்சாகப்படுத்தி வருகிறேன். மருமகள் தேவி நாட்டுப்புற பாடல் நன்றாக பாடுவார். எனவே 2 பேரும் சேர்ந்து இந்த நாளில் எங்கள் இசைக்கச்சேரியை பெண்களுக்காக வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சனா

நசியனூரை சேர்ந்த காஞ்சனா கூறியதாவது:-

பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வகையில் ஈரோட்டில் மட்டுமே காணும் பொங்கல் முற்றிலும் பெண்களுக்கான வகையில் கொண்டாடப்படுகிறது. இது எனக்கு மிகவும் பிடித்த விழா. நான் பல ஆண்டுகளாக இங்கே வருகிறேன். நான் ஆட்டம் போடுவது இல்லை. ஆனால் சக பெண்கள் ஆடுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இன்று காலையிலேயே வந்து விட்டேன். இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வினையும் செல்போனில் படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி, ஈரோட்டின் பெருமையையும், பெண்களுக்காக ஈரோடு அளிக்கும் முக்கியத்துவம் குறித்தும் கூறி இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மங்கை

முனிசிபல்காலனி பகுதியை சேர்ந்த மங்கை என்ற பெண் கூறியதாவது:-

நான் 30 ஆண்டுகளாக ஈரோட்டில் வசித்து வருகிறேன். ஆனால், காணும் பொங்கலுக்கு இதுவரை வ.உ.சி.பூங்காவுக்கு வந்ததது இல்லை. முதல் முறையாக இங்கே வந்தேன். வந்து பார்த்தால் இத்தனை பெண்களா என்று வியப்பாக இருந்தது. மிக மகிழ்ச்சியாக அனைவரும் கொண்டாடுவதை பார்க்கும்போது இத்தனை ஆண்டுகள் இது தெரியாமல் இருந்து விட்டோமே என்று நினைத்தேன். அடுத்த ஆண்டு எனது குடும்பத்து பெண்கள், வெளியூரில் உள்ள உறவினர்களையும் கண்டிப்பாக அழைத்து வருவேன். இன்று நான் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பினேன். அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவையொட்டி வ.உ.சி.பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையில் பூங்காவின் உள் பகுதியில் முழுமையாக பெண் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


Next Story