ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தாா்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான ஆண்டு தணிக்கை மேற்கொண்டார். இதில் ஈரோடு வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகள், குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடர்பான பதிவேடுகள் மற்றும் தொடர்புடைய கோப்புகள், படைக்கல உரிமம், வெடிபொருள் உரிமம், பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் கோப்புகள், அரசு நிலங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நிலவரி இனங்கள் தொடர்பான கோப்புகள், நிலம், கனிமம் மற்றும் பதிவரை தொடர்பான பதிவேடுகள், கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், பட்டா மேல் முறையீட்டு நடிவடிக்கைகள் குறித்தும், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாகவும், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பான பணி முன்னேற்றம், தணிக்கை பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பதிவரை மற்றும் நிலஅளவை பிரிவு, இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட சார்நிலை கருவூலம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.