ஈரோடு மாநகராட்சி தினக்கூலி பணியாளர்கள் அமைச்சரிடம் மனு
அமைச்சரிடம் மனு
ஈரோடு மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சியில், சுய உதவி குழு மூலம் தின கூலி அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், டி.பி.சி. பணியாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள், அலுவலக உட்புற மற்றும் வெளிப்புற பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஆகிய அனைத்து சுய உதவிக்குழு தினக்கூலி பணியாளர்களையும் ஒருங்கிணைத்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
அதற்கு அமைச்சர் சு.முத்துசாமி, 'தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் தினக்கூலி அடிப்படையில் பணியில் அமர்ந்த அரசிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்' என தெரிவித்தார்.
முன்னதாக மேற்கண்ட கோரிக்கை மனுவை, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் அனைத்து மண்டல தலைவர்களிடமும், மாநகராட்சி தினக்கூலி பணியாளர்கள் வழங்கினார்கள்.