வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு: அணைக்கட்டு வெடிவைத்து தகர்ப்பு
வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1950-ம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. 72 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணைக்கட்டில், வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சாத்தனூர் அணை நிரம்பியதால், தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருந்தது.
உடைப்பு ஏற்படும் அபாயம்
அதிகப்படியான தண்ணீர் வருவதால் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. அதன் வழியாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் அதையொட்டி அமைந்துள்ள ஆற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை அதன் பலத்தை இழந்தது. எந்த நேரத்திலும் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கண்காணித்தனர்.
ஆற்றில் சமநிலையில் நீரோட்டம் இல்லாமல், ஒரு பகுதியில் மட்டுமே செல்வதால் தான் இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக கூறி, அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் நேற்று காலையில் ஈடுபட்டனர்.
வெடிவைத்து தகர்ப்பு
தென்பெண்ணை ஆற்றில் ஓடும் தண்ணீர், அணைக்கட்டின் மையப்பகுதி வழியாக தடையின்றி ஓடும் வகையில், அணைக்கட்டின் மையப்பகுதியில் வெடிவைத்து தகர்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அணைக்கட்டின் மையப்பகுதியில் எந்திரம் மூலம் துளையிட்டு டெட்டனேட்டர் குச்சி மற்றும் வெடிமருந்து வைத்து வெடிக்க செய்தனர். ஒரே நேரத்தில் வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் அணைக்கட்டின் மையப்பகுதி உடைந்து, கற்கள் சிதறின.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அணைக்கட்டின் உடைந்த பகுதிகளை அப்புறப்படுத்தி, தண்ணீர் அந்த வழியாக வழிந்தோட செய்யப்பட்டது. இதனால் அங்கு தேங்கி இருந்த தண்ணீர் அனைத்தும் வேகமாக வடிந்தது. அணைக்கட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டதால் அணைக்கட்டில் ஒரு சொட்டு தண்ணீர் கூட சேமித்து வைக்க முடியாது என்றும், அதிகாரிகளின் இந்த செயல் வேடிக்கையாக இருக்கிறது என்றும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.