ஈரடுக்கு பஸ் நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சேலத்தில் இந்த மாதம் நடைபெறும் விழாவில் ஈரடுக்கு பஸ் நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சேலத்தில் இந்த மாதம் நடைபெறும் விழாவில் ஈரடுக்கு பஸ் நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட கன்னக்குறிச்சியில் ஒரு திருமண மண்டபத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும். ஒரு தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். கட்சி நிர்வாகிகளின் பிள்ளைகள், கல்லூரி தோழர்கள், தொழிற்சாலையில் பணிபுரிபவர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களை தி.மு.க.வில் இணைத்து கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்பதற்காகத்தான் உடன் பிறப்பாய் இணைவோம் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். எனவே புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
சேலம் வருகிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் சேலத்திற்கு வருகிறார். அப்போது நடைபெறும் விழாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பெரியார் பேரங்காடி, சட்டக்கல்லூரி ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார். அதே போன்று ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.300 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ரகுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, பகுதி செயலாளர் சாந்தமூர்த்திஉள்பட பலர் கலந்துகொண்டனர்.