சேலத்தில் ஈரடுக்கு பஸ் நிலையம், கருணாநிதி சிலை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
சேலத்தில் ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
கருணாநிதி சிலை
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். பின்னர் அவர் தலைமையில் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ஈரடுக்கு பஸ் நிலையம்
இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார். இதையொட்டி திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்ணா பூங்காவில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது முதல்-அமைச்சர் திறந்து வைத்து பேச உள்ள மேடையை அமைச்சர் பார்வையிட்டதோடு, ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கேட்டறிந்தார்
அப்போது அவர் கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளிட்டவைகளை பார்வையிட்டதோடு, திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நாளை (திங்கட்கிழமை) காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழாக்கோலம் பூண்டது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாநகரம் விழாக்கோலம் பூண்டது. இதையொட்டி, சேலம் நகர் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வரவேற்கும் சுவர் விளம்பரங்களும், விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. திரும்பிய திசையெங்கும் கருப்பு, சிவப்பு வண்ண தி.மு.க. ெகாடிகள் கம்பீரமாக பறக்கின்றன. இதனால் சேலம் மாநகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழிநெடுகிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.