அரிசி, கடுகு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு வேண்டும்
அரிசி, கடுகு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
பழனி வணிகர் சங்க பேரமைப்பின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பழனி நகர கவுரவ தலைவர் ஹரிகரமுத்து தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜே.பி.சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ, மண்டல தலைவர் கிருபாகரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். தொடர்ந்து வணிகர் சங்கத்துக்காக பழனியை தனி மாவட்டமாக அறிவித்து அதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி தலைவராக ஜே.பி.சரவணன் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக விக்கிரமராஜாவுக்கு பழனி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வெள்ளிவேல் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில், தமிழகம் முழுவதும் புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறோம். அதன்படி வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் பழனி மாவட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கவும் முதல்-அமைச்சருக்கு வணிகர் சங்க பேரமைப்பு பரிந்துரை செய்கிறது. மேலும் பதிவு செய்த வணிக நிறுவனங்களுக்கு 15 சதவீத மின்கட்டண குறைப்பு என்ற அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். அதேவேளையில் இரவு, பகல் என்று பிரிக்காமல் ஒரே சீரான மின்கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்.
வழிகாட்டுதல் குழு
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை, கடையாக சோதனை செய்து, வியாபாரிகளை அச்சுறுத்துகின்றனர். அதேபோல் கொரோனாவால் 2 ஆண்டுகளாக விழிபிதுங்கி உள்ள நிலையில் வணிகவரி சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் வணிகர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு வணிகர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத சூழலை உருவாக்க வலியுறுத்துகிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் கடை வாடகை விகித்தை சீர்படுத்த வழிகாட்டுதல் குழு அமைத்து, அதில் வணிகர் சங்க பிரதிநிதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளை இணைத்துள்ள அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
புகையில்லா மாநிலமாக...
வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து அரிசி, கடுகு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கான தடையை வரவேற்கிறோம். ஆனால் தமிழகத்தில் மொத்தமாக யார் விற்பனை செய்கிறார்கள் என்று உளவுத்துறைக்கு தெரியும். எனவே போலீஸ்துறை சரியாக செயல்பட்டால் புகையிலை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பழனி நகர வணிகர் சங்க நிர்வாகிகளான சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில் டாக்டர் விமல் குமார், வக்கீல் மணிக்கண்ணன் உள்பட வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.