விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லையே..!


விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லையே..!
x
தினத்தந்தி 28 Jun 2023 12:30 AM IST (Updated: 28 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மாங்காய் விலை வீழ்ச்சி குறித்து விவசாயிகள், வியாபாாிகளும் கூறியதாவது:-

திண்டுக்கல்

உடலுக்கு வலிமையோடு, பளபளக்கும் வனப்பையும் தருபவை பழங்கள். ஆரோக்கிய உணவு பட்டியலில் முதலிடம் பிடிப்பதும் அவையே. எனவே பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் விரும்பும் உணவாக பழங்கள் இருக்கின்றன.

மாம்பழம்

சுவைமிகு கனிகளை இனிய தமிழ் இலக்கியங்கள் வகைப்படுத்தி இருப்பதே அதற்கு சான்று. அதோடு சுவையின் அடிப்படையில் மா, பலா, வாழை முக்கனிகளை வரிசைப்படுத்தி கூறுகின்றன. இந்த முக்கனிகளில் முதலிடத்தை பிடித்தது, மாம்பழம். முக்கனிகளில் முதன்மையான மாம்பழம், நமது தேசிய பழம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மாம்பழம் அதிக அளவில் உற்பத்தியாகும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக திண்டுக்கல்லில் மாம்பழ உற்பத்தி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழனி, ஆயக்குடி, ஆத்தூர் பகுதிகளில் மா மரங்கள் அதிகமாக உள்ளன.

வகைகள்

கல்லாமை, காசாலட்டு, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா உள்பட 10-க் கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் விளைகின்றன. இங்கு விளையும் மாம்பழங்கள் சுவை அதிகம் கொண்டவை ஆகும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு வெளிமாவட்டங்களில் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் நல்ல கிராக்கி இருக்கிறது. மாம்பழ சீசன் தொடங்கி விட்டால் வெளியூர் வியாபாரிகள் இங்கு குவிந்து விடுவார்கள். மொத்தமாக மாங்காய்களை வாங்கி சென்று பழுக்க வைத்து மாம்பழமாக விற்பனை செய்வார்கள்.

விலை குறைவு

இதற்கிடையே இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. மாம்பழ சீசனும் கொடிக்கட்டி பறந்தது. எனவே நல்ல வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். இதனால் மாங்காய்களை பறித்து விற்பனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாங்காய்களை வாங்குவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாக மாங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மாங்காய் விலை வீழ்ச்சியை சந்தித்ததால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு மாங்காய் விலை வீழ்ச்சி குறித்து விவசாயிகள், வியாபாாிகளும் கூறியதாவது:-

செலவு அதிகம்

வேம்பார்பட்டி மா விவசாயி ஷாஜகான் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிட்டால், இந்த ஆண்டில் தான் நோய் தாக்குதல் அதிகம். மா மரங்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது வழக்கம். இந்த ஆண்டு 8 முறை பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் நிலை ஏற்பட்டது. கொக்கி புழுக்கள், செல் பூச்சி தாக்குதலில் இருந்து பூக்கள், மா பிஞ்சுகளை காக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டி அவசியம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு வழக்கத்தை விட கூடுதல் செலவானது. அவ்வளவு செலவு செய்தும் மாங்காய்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. சப்பட்டை, பங்கனபள்ளி போன்ற உயர் ரக மாங்காய் மட்டுமின்றி செந்தூரம், காசாலட்டு, கல்லாமை உள்பட அனைத்து ரக மாங்காய்களுக்கும் பாதிதான் கிடைத்தது. மாங்காய் சீசனில் இந்த ஆண்டு கருப்பு ஆண்டாக கருதலாம்" என்றார்.

வடமாநில வியாபாரிகள்

வேம்பார்பட்டி மாங்காய் கமிஷன் மண்டி உரிமையாளர் ஹரிஹரன் கூறுகையில், மா மரங்கள் ஜனவரி, பிப்ரவரியில் பூக்க தொடங்கிவிடும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் பூக்கள் பூத்த தருணத்தில் எதிர்பாராத மழை பெய்தது. இதனால் முதல் கட்டமாக பூத்த பூக்கள் பெருமளவு கருகியது. எனவே 20 சதவீத மாங்காய்களே வரத்து இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பெய்த திடீர் மழையால் பிஞ்சுகள் எடை கூடி 40 சதவீத வரத்து காணப்பட்டது. ஆனால் நோய் தாக்குதலால் 70 சதவீத மாங்காய்களில் கருப்பு புள்ளிகள் ஏற்பட்டன. இதனால் கேரளா, வடமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. வழக்கமாக 1,000 லாரி மாங்காய்களை கொள்முதல் செய்யும் வடமாநில வியாபாரிகள், இந்த ஆண்டு 200 லாரிகள் மட்டுமே கொள்முதல் செய்தனர். அதற்கு மாங்காய்களில் ஏற்பட்ட கருப்பு புள்ளிகளே காரணம். எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள், குத்தகை வியாபாரிகள், முன்பணம் கொடுத்த கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

சுவை குறைவு

கணவாய்பட்டி மாம்பழ கூழ் தொழிற்சாலை உரிமையாளர் பழனிச்சாமி கூறுகையில், "இந்த ஆண்டு மாங்காய் சீசன் கடும் நஷ்டத்தை சந்தித்தது. அதற்கு மாங்காய்களில் ஏற்பட்ட கருப்பு புள்ளிகளே காரணம். நோய் தாக்குதல் மட்டுமின்றி பருவம் தவறிய மழையால் மாங்காய்களில் நீர் சத்து அதிகமாக வழக்கமான சுவை குறைந்து விட்டது. மாங்காய்கள் போதுமான எடையில் இருந்தும் சுவை குறைந்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலை பல ஆண்டுகளாக இல்லை. இதுபோன்ற குறைபாடு இனிவரும் ஆண்டுகளில் வராமல் தடுக்க தோட்டக்கலை துறை அதிகாரிகள் மா விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்" என்றார்.


Next Story