பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையிலும் தூத்துக்குடியில் சீரான குடிநீர் வினியோகம்:மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையிலும் தூத்துக்குடியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக,மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை ரூ.25.57 கோடியில் சீரமைப்பது தொடர்பாக நான்கு தீர்மானங்கள் உள்ளிட்ட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, காய்கறி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. எனவே, பண்ணை பசுமை காய்கறி அங்காடி அல்லது உழவர் சந்தை மூலம் 60 வார்டுகளிலும் காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனிமய மாதா பேராலய தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியாகும் வண்டுகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
குடிநீர்
இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இருப்பினும் தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களாக நிலைமை மிகவும் மோசமாக இருந்த போதிலும், மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீரை வழங்கி வருகிறோம். குடிநீர் பிரச்சினை இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதேபோன்று சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பனிமய மாதா பேராலய திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன. பேராலய பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 9 இடங்களில் குடிநீர் தொட்டி, 150 தூய்மை பணியாளர்கள், நகரும் கழிப்பறை வசதி, அந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக பரமாரிக்க கூடுதல் பணியாளர்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்திய உணவுக் கழகம் மத்திய அரசு நிறுவனமாகும். அதில் இருந்து வண்டுகள் வெளியேறி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.