சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தாலும் எங்கள் வருமானம் உயரவில்லையே... ஊட்டி நடைபாதை வியாபாரிகள் ஏக்கம்
கொரோனா பரவல் முடிந்தோடு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தாலும் எங்கள் வருமானம் உயரவில்லையே...என்று ஊட்டி நடைபாதை வியாபாரிகள் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.
ஊட்டி
கொரோனா பரவல் முடிந்தோடு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தாலும் எங்கள் வருமானம் உயரவில்லையே...என்று ஊட்டி நடைபாதை வியாபாரிகள் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.
சுற்றுலா மாவட்டம்
நீலகிரி மலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்து சிறப்பித்து உள்ளதால் சர்வதேச அளவில் எல்லோருக்கும் தெரியும் மாவட்டம் ஆகிவிட்டது. இங்கு தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக சுற்றுலா பிரதானமாக இடம் வகிக்கிறது. இதனால் இங்கு சுற்றுலாவை நம்பி தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் தொழில் செய்து வருகின்றனர்.
ஆனாலும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாவை நம்பி இருந்த வர்த்தகங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. தற்போது சுற்றுலா வர்த்தகம் மீண்டும் அதிகரிக்க தொடங்க உள்ளது. குறிப்பாக ஊட்டியில் 2-வது சீசன் தொடங்க உள்ளதையடுத்து பூக்கள் உற்பத்தி மற்றும் மலர் மாடங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் வர்த்தகம் மேலும் அதிகமாகும்.
சுற்றுலா வர ஆர்வம்
நீலகிரி மாவட்ட ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் சங்க செயலாளர் சந்திரசேகர்:- கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடங்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். தற்போது கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுற்றுலா உள்ளிட்ட விஷயங்களுக்காக வெளியூர் செல்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் 2 வருடங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
முதல் சீசனில் மட்டும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து சென்றுள்ளனர். இதே போல் கடந்த வாரம் முழுவதும் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி சுமார் ஒரு லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். இதற்குப் பின்னரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் சுற்றுலா வர்த்தகத்தின் நிலை தற்போது நன்றாக உள்ளது.
இதற்கிடையே ஓட்டல்களில் சீசனுக்கு ஏற்ப அதிகபட்சமாக 30 சதவீதம் வரை மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அனுமதி இல்லாத காட்டேஜ்கள்
மகேந்திரன், நீலகிரி மாவட்ட காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி:
கடந்த 2 வருடங்களாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வருமானம் பாதிக்கப்பட்டு வங்கிக் கடன் கட்டுவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த நிலை சற்று மாறி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை பதிவு செய்த காட்டேஜ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது கிடையாது. நாங்கள் ஒரு முறை வாடிக்கையாளர்களை வரவழைத்தால் அவர்கள் மீண்டும் வரும் வகையில் கட்டணம் வசூலித்தால் தான் வருவார்கள்.
அங்கீகாரம் பெறாமல் அதிகாரிகளை சமாளிப்பதற்காக பணம் கொடுத்து காட்டேஜ் நடத்துபவர்கள்தான் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணப்புழக்கம் இல்லை
மாலதி, நடைபாதை வியாபாரி: தற்போது சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு அதிகஅளவில் வருகை இருப்பது உண்மைதான். ஆனால் சுற்றுலா பயணிகளிடம் இதற்கு முன்னர் இருந்தது போல் பெரிய அளவில் பணப்புழக்கம் இல்லை. மேலும் விலைவாசி அதிகரித்து விட்டது. எங்கள் கடையில் பயன்படுத்தும் அடுப்புக்கரி உள்பட பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. இதனால் எங்களுக்கு வியாபாரம் முன்னர் இருந்தது போல் இல்லை. காலையில் 8 மணிக்கு கடைகளை திறப்போம். ஆனால் தற்போது 12 மணிக்கு பின்னர் தான் கடைகளை திறக்கிறோம். மேலும் ஊட்டியில் சுற்றுச்சூழலை காரணம் காட்டி மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்த விடுவதில்லை. கியாஸ் சிலிண்டரைதான் பயன்படுத்துகிறோம். அதன் விலையும் அதிகமாக உள்ளதால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.
ரூபா, நடைபாதை மாங்காய் வியாபாரி:கொரோனாவுக்கு பின்னர் ஊட்டிக்கு வர சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி உள்ளனர். ஆனால் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் விலை அதிகரித்துள்ளதால் பெரும்பான்மையான பணத்தை அங்கே செலவழித்து விடுகின்றனர்.
அதன்பின்னர் எங்களைப் போன்ற நடை பாதை மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் பொருள்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். குழந்தைகளுடன் வருபவர்கள் மட்டும் எங்களிடம் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். கொரோனாவுக்கு முந்தைய வியாபாரம் வரும் என்ற நம்பிக்கையில் வியாபாரத்தை தொடர்ந்து செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
லட்சுமி, சாலையோர நடைபாதை வியாபாரி: சுற்றுலா பயணிகள் கடந்த 3, 4 வருடங்களுக்கு முன்னர் ஊட்டிக்கு வந்து இருப்பார்கள். கொரோனாவுக்கு பிறகு தற்போது மீண்டும் ஊட்டிக்கு வரும்போது ஏற்கனவே தாங்கள் குறைந்த விலையில் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் வாங்கிய கடைகளுக்கு வருகின்றனர். ஆனால் அன்றைய விலையவே தற்போதும் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டதால், விலை ஏற்றத்தை சுற்றுலா பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்கேஸ்வரன், வெளி மாவட்ட சுற்றுலா பயணி: கொரோனா கொடுத்த மன அழுத்தம் காரணமாக கட்டாயமாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றுவதால் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு வருகிறோம். ஆனால் இங்கு ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டணம் அதிகரித்து விட்டது. அதே சமயத்தில் குழந்தைகளுடன் விளையாட்டுப் பொருட்கள் பொம்மைகள் உள்ளிட்ட எந்த விஷயங்களுக்கு போனாலும் விலை அதிகமாக உள்ளது. அதனால் சுற்றுலா பிரதேசங்களில் ஷாப்பிங் செய்யும் பழக்கம் குறைந்துவிட்டது.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கல்வி, வேலை, குளிர்கால நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கோவை உள்ளிட்ட சமவெளி பிரதேசங்களுக்கு சென்று விட்டனர். இதனால் இங்கு உள்ள உள்ளூர் மக்களை விட வெளியூரிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் தான் வியாபாரம் அதிகரிக்கும் என்று ஒட்டு மொத்தமாக நடைபாதை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.