மாலை தாண்டும் திருவிழா


மாலை தாண்டும் திருவிழா
x

தோகைமலை அருகே மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

மாலை தாண்டும் திருவிழா

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வில்கல்பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு வைஸ்பேர்நாயக்கர் மந்தையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் 9 நாள் விரதம் இருந்து வைஸ்பேர்நாயக்கர் மந்தையில் உள்ள மாரியம்மனுக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் மாரியம்மனுக்கு கரகம் பாலித்து தாரை தப்பட்டை, உருமி மேளம் முழங்க, வாணவேடிக்கையுடன் வீதிஉலா வந்து கோவிலில் குடிபுகுந்தது ஆகியவை நடைபெற்றன.

2-ம் நாள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று 3-ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வைஸ்பேர்நாயக்கர் மந்தை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதால் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 14 மந்தையர்கள் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இவர்களை வில்கல்பட்டி வைஸ்பேர்நாயக்கர் மந்தை சார்பாக மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் மந்தையர்களை வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வெற்றி

பின்னர் மாரியம்மன் கோவில் முன்பாக அனைத்து மந்தைகளின் சலையத் எருது மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க வைஸ்பேர்நாயக்கர் மந்தை எதிரே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலையத் எருது மாடுகளை அழைத்து சென்றனர்.

அங்கு உள்ள எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து அனைத்து சலையத் எருது மாடுகளுக்கும் புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். அங்கிருந்து வைஸ்பேர்நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட வெள்ளை துணியால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 500-க்கும் மேற்பட்ட சலையத் எருது மாடுகள் ஓடி வந்தன. இதில் அய்யம்பாளையம் கோப்பா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது.

மஞ்சள் நீராட்டுடன் வீதிஉலா

அப்போது அவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை முதலாவதாக ஓடி வந்த சலையத் எருது மாடு மீது தூவி வரவேற்று எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனின் கரகத்தை மஞ்சள் நீராட்டுடன் வீதிஉலாவாக எடுத்துச்சென்று சாமிக்கு வழி அனுப்பி வைத்தனர். இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story