எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் மாலை தாண்டும் விழா
விராலிமலை அருகே எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாலை தாண்டும் விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெருமாள் சுவாமி கோவில்
விராலிமலை தாலுகா ஜெயமங்கலம் குப்பாநாயக்கர் பண்ணையில் எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி மாலை தாண்டும் விழா (எருது விடும் விழா) ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த விழாவானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இந்த ஆண்டு கோவில் திருவிழா நடத்த ஊர்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனைதொடர்ந்து அன்று முதல் அப்பகுதி மக்கள் அங்குள்ள எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலிலேயே தங்கி விரதமிருந்து சமைத்து உண்டு வந்தனர். நேற்று விழா தொடங்கியது.
மாடுகளுக்கு பாதபூஜை
இதையொட்டி அதிகாலை முதல் பெரூர், தேசிய மங்களம், வையம்பட்டி, வில்லுகாரன்பட்டி, தொப்பம்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகளுக்கு உள்ளூர் பெண்கள் பாரம்பரிய முறைப்படி புனித நீர் தெளித்து பாதபூஜைகளை செய்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஜெயமங்களத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் அப்பால் உள்ள பகுதியிலிருந்து அனைத்து மாடுகளையும் ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டு அதில் முதலாவதாக எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் உள்ள அய்யாசீமை மந்தைக்கு வந்தடைந்த மாட்டிற்கு சிறப்பு பரிசாக மஞ்சள் மற்றும் எலுமிச்சை பழம் கொடுக்கப்பட்டது.
இதில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவிலின் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.