ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியானது அல்ல: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியானது அல்ல என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியானது அல்ல என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தெலுங்கானா கவர்னர்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனை
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதற்காக அனைத்து முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதன்படி வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து கவர்னர்கள், முதல்-அமைச்சர்களுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசுகிறார்.
விவேகானந்தர் உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த முன்னேற்ற பாதையில் பாரதம் சென்று கொண்டிருக்கிறது. மூக்கில் விடக்கூடிய கொரோனா தடுப்பு சொட்டு மருந்து வந்துள்ளது. சீனாவில் இன்னும் கொரோனா பாதிப்பு உள்ளது. கதவடைப்பு நடக்கிறது. ஆனால் நாம் கொரோனாவில் இருந்து தப்பித்து உள்ளோம் என்றால், அதற்கு தடுப்பூசிதான் காரணம்.
விஞ்ஞானிகளை ஊக்குவித்து, தடுப்பூசியை ஏற்பாடு செய்த பிரதமர், அதனை முன்னெடுத்து சென்ற மாநில அரசுகள், அதனை ஏற்று கொண்ட மக்களால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
கருத்து வேற்றுமை
தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் ரீதியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என்று கவர்னர் சில சந்தேகங்களை கேட்டுள்ளார். கவர்னர் என்றால் எந்த சந்தேகமும் படக்கூடாது, உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்கிறார்கள்.
கவர்னர் அமைச்சரை அழைத்து சில சந்தேகங்களை கேட்டுள்ளார். விளக்கம் கிடைத்தபிறகு அவர் நடவடிக்கை எடுக்கலாம். கவர்னருக்கு மசோதா வந்தவுடன் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அந்த மசோதா மக்களுக்கு பயன் தருமா? என்ற சந்தேகம் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை பெறுவதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம். இது காலதாமதப்படுத்துவது கிடையாது.
ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியான அல்ல என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
----