ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்


ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்
x

ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு முதல் கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு முதல் கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசினார்.

பதவி ஏற்பு விழா

குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் முதல் திட்டக்குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து புதிய திட்டக்குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன், நீலபெருமாள், ஜான்சிலின் விஜிலா, சிவகுமார், ராஜேஷ் பாபு, ஆதிலிங்க பெருமாள், மேரிஜெனட் விஜிலா, விஜிலா, ஜான் தினேஷ், சிவன், ராபர்ட் கிளாரன்ஸ், ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

திட்டக்குழு தலைவர்

கூட்டத்தில் திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் பேசுகையில், "திட்டக் குழுவானது குமரி மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி வளர்ச்சிக்காக மட்டும் அல்லாது ஒட்டுமொத்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக திட்டமிட வேண்டும். இன்று திட்டமிடக் கூடிய திட்டம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும்போது அது அனைவருக்கும் பயன் அளிக்க வேண்டும். எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றாா்.

மேயர் பேச்சு

முன்னதாக மேயர் மகேஷ் பேசுகையில் "மழை பெய்யும்போது நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய ரோட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தண்ணீர் தேங்கி வந்தது. இதனால் அங்கு அடிக்கடி சாலை சேதம் அடைந்தது. இதனால் ஒரு கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க ரூ.90 லட்சம் வரை செலவானது. இதைத் தொடர்ந்து நான் மேயராக பதவி ஏற்ற பிறகு அந்த பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு தண்ணீர் செல்ல குழாய் அமைத்து விட்டால் தண்ணீர் தேங்காமல் இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரூ.3 லட்சத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகிறது. திட்டமிட்டு செய்ததின் காரணமாக பலன் கிடைத்துள்ளது. எனவே ஒவ்வொரு பணிகளையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குனர் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), மாவட்ட திட்டக்குழு அலுவலர் இலக்குவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story