தூத்துக்குடியை பசுமை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. வேண்டுகோள்


தூத்துக்குடியை பசுமை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்   என கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
x

தூத்துக்குடியை பசுமை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

"தூத்துக்குடியை பசுமை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அந்தந்த துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது:-

இணைப்பு சாலை

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் ஏழை, எளிய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் செயல்படுத்த வேண்டிய மீதமுள்ள இலக்கை விரைந்து முடிக்க வேண்டும். பாரத பிரதமர் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊரக குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலைவசதி ஏற்படுத்திக்கொடுப்பதுடன் ஊரக சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் இணைத்திடவும் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், கல்லூரிகள் ஆகிய அத்தியாவசிய இடங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இந்த திட்டத்தில் முழு கவனம் செலுத்தி விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இயற்கை உரம்

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் அமைந்த ஊராட்சியாகவும், சுகாதார ஊராட்சியாகவும் மாற்றிட ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்ற வேண்டும்.

பொதுஇடங்களில் கொட்டப்படும் குப்பைகளை சேகரித்து இயற்கை உரம் தயார் செய்வதோடு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குடிநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். நிலத்தடி நீரினை உயர்த்திடவும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கிடும் விதமாக அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்கவும், கழிவுநீர்களை உறிஞ்சிகுழாய் மூலமாக மறுசுழற்சி செய்து தோட்டங்களுக்கு உபயோகப்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அங்கன்வாடி மையம் பணியாளர் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒத்துழைப்பு

மியாவாக்கி திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் பல குறுங்காடுகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடியை பசுமை மாவட்டமாக மாற்றுவதோடு அதிக மழை பொழியவும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story