தொழில் கடன் முகாமை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தஞ்சையில் 21-ந்தேதி தொடங்கும் தொழில் கடன் உதவி வழங்கும் முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சாரூஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சையில் 21-ந்தேதி தொடங்கும் தொழில் கடன் உதவி வழங்கும் முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சாரூஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் வளர்ச்சி
தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதி கழகமாகும். கடந்த 1949-ம் ஆண்டு தொடங்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.
தொழில் கடன் முகாம்
தஞ்சையில் உள்ள கிளை அலுவலகம் நாஞ்சிக்கோட்டை ரோடு, என்.ஜி.கே. அபார்ட்மெண்ட் என்ற முகவரியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 21-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி-யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள். மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதானமானியம் மற்றும் இதரமானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
40 சதவீத சலுகை
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1½ கோடி வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 40 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் ெசன்று தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.